“கல்வியில் கரையிலா காஞ்சி” என்ற ஆன்றோர் வாக்கை தொடர்ந்து மெய்ப்பிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறத்தக்கவகையில் உயர்த்தர உயர்க்கல்வியைப் பெற்று பயனுறும் உயரிய நோக்கத்தோடு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களால் இக்கல்வி நிறுவனம் 1991இல் தோற்றுவிக்கப்பட்டது முதலே மொழிப்பாடத்துறையாக தமிழ்த்துறை விளங்கிவருகிறது. 2013 ஆம் ஆண்டு 30 மாணவர்களைக் கொண்டு இளங்கலைத் தமிழ்த்துறை தோற்றுவிக்கப்பெற்றது. இன்று கூடுதல் வகுப்புகளை பெறும் அளவில் வளர்ந்துள்ளது. தொடர்ந்து 2017 முதல் முதுகலைத் தமிழ் வகுப்புகளும் தொடங்கப்பட்டு முதுகலைத்தமிழ்த்துறையாக உயர்ந்துள்ளது.
இத்துறையில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக அறிஞர்களின் சொற்பொழிவு நிகழ்வான பொற்றாமரை மன்றம், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக படைப்பரங்கம், முதுகலை மாணவர்களிடம் ஆய்வுப் பார்வையை வளர்த்தெடுக்கும் வகையில் ஆய்வரங்கம், தமிழ்சார்ந்த ஆவணப்படம் மற்றும் குறும்படங்களைத் திரையிடும் திரைவெளி, நமது வரலாற்றையும் அதனோடு ஒட்டிய நமது பண்பாட்டையும் நேரடியாக அழைத்துச்சென்று உணர்த்தும் விதமாக சரித்திர தேர்ச்சிக்கொள் ஆகியன தொடர்ந்து நிகழ்த்தப்பெறுகின்றன.
இதழியலும் வெகுசன ஊடகமும், கோயிற்கலை, சைவசித்தாந்தம், தொல்லியலும் கல்வெட்டியலும், சுற்றுலாவியல், சுவடியியல் முதலான சான்றிதழ்ப் படிப்புகள் நடத்தப்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுமையம், மதுரா டிராவல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து முறையே சுவடியியல், கல்வெட்டியல், சுற்றுலாவியல் சான்றிதழ்ப் படிப்புகள் நடத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய கலைகளிலும் பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், ஓவியம் முதலான போட்டிகளிலும் தமிழ்த்துறை மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலும் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ளனர்.
இத்துறையின் சார்பில் தமிழாய்வுக்கு வளம்சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரை மலேசியாவைச் சேர்ந்த மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலாயத் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றோடும், ஆஸ்திரேலியா – சிட்னி தமிழ் மன்றம், யாழ்ப்பாணம் – விருபா இணைய தரவுதளம், வல்லமை – பன்னாட்டு இணைய இதழ்,சென்னை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சித்த மனோசக்தி ஆராய்ச்சி மையம்,, அகில இந்திய வானொலி நிலையம், செம்மூதாய்ப் பதிப்பகம்,, நாகர்கோவில் – கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம், ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி, தினமலர் நாளிதழ், தினமணி நாளிதழ், இந்து தமிழ் திசை நாளிதழ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘வள்ளுவமும் மேலாண்மையும்’, ‘பன்முகப் பார்வையில் தமிழிலக்கியக் களம்’, ‘சித்தர் நெறி’, ‘பயன்பாட்டியல் பார்வையில் தமிழ் இலக்கியங்களும் ஆவணங்களும்’, ’தமிழ் இலக்கியங்களில் பக்தி நெறிகள்’, ‘தமிழ் இலக்கியங்களில் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள்’, ‘சமூக மேம்பாட்டில் தகவல் தொடர்பு ஊடகங்கள்’, ‘நீதி இலக்கியங்களும் தமிழ்ச் சமுதாயமும்’, ‘நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்’ என்பனவாகச் சமூக பயன்பாட்டை நோக்கிய பொருண்மைகளில் ஒன்பது தேசிய மற்றும் பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழிலக்கியங்களில் சூழலியம், தமிழ்மறை ஆகிய பொருண்மைகளில் இரு பன்னாட்டு மாநாடுகள் நடத்தவும் ஆவன செய்யப்பட்டுள்ளன.
தமிழ்த்துறை பொறுப்பில் கல்லூரிக்காக 2018 இல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் சங்கரா பதிப்பகம் தொடங்கப்பெற்று இதுவரை நதிகளும் தமிழ்ச் சமுதாயமும், தமிழ் நதி, நதிகள் தந்த நாகரிகம், நீரின்றி அமையாது உலகு, மஹாபுஸ்கரம், வசந்தமாலை, காஞ்சித் தமிழ்மாலை, தமிழ்த்தேன் துளிகள், தமிழோசை, பாலராமாயணம், இளசை புராணம் என்னும் இளையாற்றகுடி மான்மியம், நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல், தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேலாண்மைச் சிந்தனைகள் உள்ளிட்ட ஆய்வு, படைப்பு மற்றும் பாட நூல்கள் வெளிவந்துள்ளன.